அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தரக்குறைவான பேச்சு மற்றும் கொலை மிரட்டல் தொடர்பாக மக்களவை உரிமைக்குழுவிடம் புகார் செய்ய உள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது எம்.பி. மாணிக்கம் தாகூர் டெல்லியில் இருந்துகொண்டு அறிக்கை விடுகிறார். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகூட தெரிவிக்கவில்லை. இங்க வந்தான்னா பன்னி சுடற துப்பாக்கிய எடுத்து சுட்டுடுங்க” என்று பேசினார். ஆனால், உடனே சுதாரிக்குக் கொண்ட அவர், கொன்னுடாதீங்க.  சும்மா ரப்பர் குண்டு துப்பாக்கிய எடுத்து சுடுங்க அவனை என சொல்லி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்.பி. மாணிக்கம்தாகூர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் குமாரசாமிராஜா, காமராஜர் ஆகிய சிறந்த முதல்வர்கள் பிறந்த விருதுநகர் மாவட்டத்தின் களங்கமாக ராஜேந்திரபாலாஜி உள்ளார். முதல்வர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவுடன், அமெரிக்கா, துபாய், பிரிட்டன் நாடுகளுக்கு சென்று திரும்பிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தொழில்கள் நிறைந்த விருதுநகர் மாவட்டத்திற்கு எவ்வளவு மூலதனம் கொண்டு வந்து  இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்காவில் அவர் எதை சாப்பிட்டாரோ தெரியவில்லை. நிதானத்தை இழந்து ராகுல்காந்தி, எதிர்க்கட்சியினர் மற்றும் என்னையும் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்திற்கு எதையும் செய்யாத அமைச்சர், சிவகாசி தொகுதியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார். சிவகாசி தொகுதிக்கு அவர் செய்யும் துரோகத்தை, சிவகாசி தொகுதியில் கூட்டணி கட்சிகள் துணையோடு வீடு, வீடாக எடுத்து சொல்ல இருக்கிறோம். அமைச்சர்கள் உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் இருவரையும் மாவட்டத்தில் இருந்து விரட்டுவதற்கு, மன்னார்குடியில் யார் காலில் விழுந்து தொகுதி மாற வைத்தார் என்பதை கூற முடியும். 

என் மீது அமைச்சரின் தரக்குறைவான பேச்சு, கொலை மிரட்டல் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் மக்களவை உரிமைக்குழுவிடம் புகார் செய்ய இருக்கிறேன். மேலும், பிரதமரின் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் கமிஷன் பெறுவது மற்றும் தவறு நடப்பது தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி பிரதமர் மோடியிடம் புகார் செய்ய இருக்கிறோம். வெள்ளையறிக்கை கேட்டால் பச்சை அறிக்கை கொடுக்கிறோம் எனக் கூறிய மங்குனி அமைச்சர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.