என்னதான் ஐடியாவோ தெரியவில்லை! கடந்த சில மாதங்களாகவே தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தி.மு.க. உள்ளிட்ட தங்களின் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வரம்பு மீறி பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு சீனியர் அமைச்சருக்கான பக்குவம் ஏதுமின்றி, திராவிட கட்சியின் கிராமப்புற காமெடி பேச்சாளர் போல் கரடுமுரடான வார்த்தைகளைப் போட்டு வறுத்தெடுக்கிறார் எதிரிகளை. 

இவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் சில நேரங்களில் முதல்வர் மற்றும் துணை முதல்வரையே அதிர வைக்கின்றன. ராஜேந்திரபாலாஜியின் ரணகள வேகம், டெல்லி வரை கொண்டு செல்லப்பட்டது உளவுத்துறையினரால். விளைவு, ’அவரை கொஞ்சம் அடக்கமா பேசச்சொல்லுங்க!’ என்று தமிழக முதல்வர்கள் இருவருக்கும் மேலேயிருந்து உத்தரவு வந்தது. ராஜேந்திர பாலாஜியும் அழைத்து, அறிவுறுத்தப்பட்டார். மேலும் அது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் நேரமென்பதால் ரா.பா.வும் அடக்கியே வாசித்தார். 

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ரகளையாக ஜெயித்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் தனது பழைய பகீர் பல்லவியை ரண்டக்க ரண்டக்க என்று துவக்கிவிட்டார் அமைச்சர். அதிலும், சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நகர கழகத்தின் சார்பில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அதிர்ச்சியின் உச்சம் தொட வைத்திருக்கிறது. 
அதன் சாம்பிள்கள்....

* தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வினரின் சட்டையை தொட்டால், தி.மு.க.வினரின் சட்டையை கிழிக்க வேண்டும். 

* நம் வீட்டுக் கதவை தி.மு.க.வினர் தட்டினால், நாம் அவர்களின் வீட்டுக் கதவை உடைக்க வேண்டும். இதுதான் நம் கொள்கை.

* இப்படி செய்கையில் உங்களுக்கு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். 16 வயதில் ஆரம்பித்த நீதிமன்ற வழக்குகள் என் மீது இன்றும் உள்ளன. எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.


* லோக்சபா தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற் எம்.பி.க்கள் டில்லிக்கு சென்று சப்பாத்தி, புரோட்டா, நாட்டுக்கோழி சாப்பிட்டு படுத்து தூங்குகின்றனர். ....என்று நீண்டிருக்கிறது. ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு, அ.தி.மு.க.வினரையே நெளிய வைத்துள்ளது என்றால், தி.மு.க.வினரை எந்தளவுக்கு திகைப்பில் அலற வைத்திருக்கும்! அக்கட்சியின் ஐ.டி. விங்க் மற்றும் தென்மாவட்ட மாவட்ட செயலாளர்கள் இணைந்து, தொடர்ந்து வரம்பு மீறி பேசிவரும் அமைச்சருக்கு எதிராக கருத்து தாக்குதலை வலுவாக வைக்கும் முடிவில் இறங்கியுள்ளனராம்.

 

இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டிருக்கையில்  தி.மு.க.வின் ஒரு மாவட்ட செயலாளர், ‘இவ்வளவு மோசமாக ஒரு அமைச்சர் பேசுறாரே! இவரு உண்மையிலேயே அமைச்சர்தானா இல்ல  ஏதாவது மார்க்கெட்ல  கறிக்கடை எதுவும் வெச்சிருக்காரா?’ என்று கேட்க, அனைவரும் விரக்தி பொங்க சிரித்திருக்கின்றனர். அநேகமாக அமைச்சருக்கு எதிராக தி.மு.க.வின் அர்ச்சனைகள் துவங்கலாம், ஆனால் அதற்கு ராஜேந்திர பாலாஜியிடமிருந்து வந்து விழும் எதிர்தாக்குதலை நினைத்தால்தான் இப்பவே தலை சுத்துது!