திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை அடுத்து, திமுக கட்சி பெயரை குடும்ப முன்னேற்றக் கழகம் என்ற வைத்துக்கொள்ளலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செமையாக கலாய்த்துள்ளார். 
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்துவருகிறார்கள். அதிமுகவினரும் இதை விமர்சித்துவருகிறார்கள். திமுகவை விமர்சிக்கும் விதமாக, ஜெயலலிதா பேசிய பேச்சை ‘அன்றே அம்மா சொன்னார்..’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு அதை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வைரல் ஆக்கியது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞணி செயலாளராக நியமிக்கப்பட்டதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஒரு முறை திமுக ஒன்றும் காஞ்சி சங்கரமடம் அல்ல என்று காஞ்சி சங்கர மடத்தை கிண்டல் செய்தார் கருணாநிதி. இன்று அதையெல்லாம் மிஞ்சும் வகையில், கருணாநிதிக்கு பிறகு மு.க. ஸ்டாலின் நன்றாக அரசியல் செய்கிறார். தன் மகன் உதயநிதியை இளைஞர் அணி செயலராக அறிவித்து பட்டம் சூட்டியுள்ளார். திமுகவை பொறுத்தவரை கட்சியின் அதிகார மையங்கள் ஒரே குடும்பத்தில் குவிந்துகிடக்கின்றன. அந்தக் கட்சியில் காலங்காலமாக கஷ்டப்பட்டு வரும் தொண்டர்களுக்கு மதிப்பே இல்லை.

 
தற்போது அதிமுகவில் சாமானியர்கள் முதல்வராகவும் துணை முதல்வராகவும் இருந்துவருகிறார்கள். திமுகவில் உதயநிதியைவிட நல்ல தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், எந்தத் தகுதியுமே இல்லாத உதயநிதிக்கு ஸ்டாலினின் மகன் என்பதால் மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக என்ற கட்சி பெயரை குடும்ப முன்னேற்ற கழகம் என அவர்கள் மாற்றிக்கொள்ளலாம்” என்று கிண்டலடித்து விமர்சனம் செய்தார்.