தமிழகத்தில் எப்போதும் மாஸான லீடர் பாஸான லீடர் என்றால், அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றார். ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கிய அவருடைய வெளி நாட்டுப் பயணம், நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று அதிகாலை சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. 
முதல்வர் இன்று சென்னை திரும்பியிருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அப்படி வெள்ளை அறிக்கை வெளியிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்துவதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கை குறித்து முதல்வருடன் அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் எப்போதும் மாஸான லீடர் பாஸான லீடர் என்றால், அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,  பொறாமையால் மு.க. ஸ்டாலின் முதல்வரைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.” என்று தெரிவித்தார். அமமுக பற்றி எழுப்பிய கேள்விக்கு, “அமமுகவிலிருந்து அனைவரும் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள்” என்றும் அவர் கூறினார்.