கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் வேலையில்லை என்பதால் மேற்குவங்கம் சென்றுவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய சின்னத்தை விளம்பரப்படுத்துவது கடினம் என்பதால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக குறிப்பிட்டார். நடிகர் கமல்ஹாசன் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அவர் விமர்சித்தார். 

நடிகர் கமலஹாசன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படியே சென்று விட வேண்டியதுதான் என்றும், தமிழ்நாட்டில் அவருக்கு வேலை இல்லை என்றும் தெரிவித்தார். கமல் ஆரம்பித்த கட்சி சிரிப்பு படம் போன்றது என்ற அவர், ரஜினியைப் போல் இருக்காமல் கிணற்றில் குதித்துவிட்டு மேலே ஏற கயிறு கிடைக்காமல் தடவிக் கொண்டிருப்பதாக காட்டமாக தெரிவித்தார்.

 

மேலும் அமமுக சார்பில் போட்டியிட ஆட்கள் இல்லை என்றும், அதிமுக பக்கம் வந்துகொண்டிருப்பதாகவும் கூறினார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி, திமுக, அமமுகவினர் தான் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.