விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் என அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் கூறியுள்ளார்.

அதிமுகவில் அதிரடியாக பேசக்கூடியவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பரபரப்பான பதிலைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பி விடுவார். எதிர்கட்சியினர் மட்டுமில்லாமல், அதிமுகவினரே முகம்சுழிக்கும் அளவிற்கு சில சமயங்களில் அமைந்துவிடும் அவரின் பேச்சு. எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ அந்த அளவிற்கு காமெடியாகவும் பேசி சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைத்துவிடுவார். 

இந்நிலையில், அதே மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் எப்போது ஏழாம் பொருத்தம். இருவரும் கட்சி நிகழ்ச்சிகள் உட்பட அனைத்திலும் சண்டையிடுவார்கள். சமீபத்தில் கூட அமைச்சர் மீது கொலை மிரட்டல் புகார் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ ராஜவர்மன்;- வரும் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றிபெற மாட்டார். அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ என்னிடம் இருக்கிறது. மேலும், தனக்கு பிடிக்காதவர்களை ஒழிப்பதற்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் கூடவே இருந்ததால் அவரைப் பற்றிய அனைத்து விவகாரங்களும் தனக்கு அத்துப்படியாக தெரியும் எனக் கூறியிருக்கிறார். திருச்செந்தூர் முருகன் மீது சத்தியமாக தாம் சொல்வது உண்மை என்றும் மாலை போட்டுக்கொண்டு பொய் பேசவேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் கூறியிருக்கிறார்.