Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டார்.. புகுந்து விளாசும் KKSSR..!

தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார். நீரோ மன்னனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் வழியிலேயே மற்ற அமைச்சர்களும் ஆணவத்துடன் இருப்பதால் மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது. 

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran
Author
Tamil Nadu, First Published Jul 4, 2020, 2:20 PM IST

மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவரை விமர்சிக்க வேண்டாம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார். 

இதுதொடர்பாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும் நிலையில், பதவி கொடுத்தவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி நன்றி செலுத்தட்டும். தேவையின்றி, எதிர்க்கட்சித் தலைவரை விமர்சிக்கிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை உயிர்ப்பறிப்பு கொடூரத்துக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமிருந்து கண்டனம் வெளிப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் சமூக வலைதளங்களில் காணொலியாகத் தங்களின் எதிர்ப்புக் குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார்கள். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளேகூட, இந்தக் கொடூரத்தை அனுமதிக்க முடியாது எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran

தமிழக அரசு, இந்த ஊரடங்கு காலத்திலும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைப்பது தங்களின் கொள்கை முடிவு என உச்ச நீதிமன்றம் வரை சென்று, அந்தக் கொள்கையின் காரணமாக, 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்களுக்கு கொரோனாவைப் பரப்பி, ஆயிரத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிற நிலையில், தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடை திறந்து வைத்த அப்பாவையும் மகனையும் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து மரணத்தில் தள்ளிய காவல் துறையினரைக் காப்பாற்றுவதற்கு இன்றளவும் மறைமுகமாகத் துணை போய்க் கொண்டிருக்கிறது.

அதனைத் திசைத்திருப்புவதற்காக, தற்காலிகமாக மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் பெற்றிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீதிமன்றம் பாராட்டிவிட்டது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, சிபிசிஐடி நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை மேற்கொண்டிருக்கிறார். இப்போதுதான் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறீர்கள். அதுவும், எத்தனை நாட்கள் கழித்து? ஒரு வழக்கின் ஆரம்பத்தில் முழு உண்மையும் தெரிந்துவிடாது என்று முதல்வருக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது அறிக்கையிலேயே தன்னையும் அறியாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran

முழு உண்மையும் தெரியாத நிலையில், அப்பா - மகன் இருவரில் ஒருவர் உடல்நிலைக்குறைவால் இறந்தார் என்றும், இன்னொருவர் மூச்சுத்திணறி இறந்தார் என்றும் முதல்வரே முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது எப்படி? காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரின் பொறுப்புக்கு இது அழகா? முதல்வரே இப்படி என்றால், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எப்படி இருப்பார்? உடல்நிலைக்குறைவாலும், மூச்சுத்திணறி இறந்தவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திலான முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்ச ரூபாய் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது? தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் உடல்நிலைக்குறைவாலும் நெஞ்சுவலியாலும் இறக்கின்றவர்களுக்கு முதல்வர் இதுவரை எவ்வளவு நிதி வழங்கியிருக்கிறார்?

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran

வழக்கின் ஆரம்பக் கட்டத்தில் முழு உண்மை தெரியாது என்கிறபோது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'இது லாக்கப் மரணமில்லை' என்று தன் முடிவை அறிவித்தது எப்படி? உயர் நீதிமன்ற மதுரை கிளை தன்னிச்சையாக விசாரித்து உத்தரவிட்டதன் பேரிலேயே தற்போதைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எல்லாரும் குரல் கொடுப்பது உங்களுக்கு அரசியலாகத் தெரிகிறது என்றால், உங்கள் அரசியல் என்பது மக்களின் நியாயத்திற்கானதாக இல்லை. நாளும் பொழுதும் பணம் பார்த்து, அரசு நிர்வாகத்தை மூடுவதுதான் உங்களின் முழு நேர அரசியலா?

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran

தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானால், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்கிறார். நீரோ மன்னனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? முதல்வர் வழியிலேயே மற்ற அமைச்சர்களும் ஆணவத்துடன் இருப்பதால் மக்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படுகிறது. இதை எடுத்துச் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. மக்கள் செல்வாக்கு மிக்கவரும் தேர்தல் களத்தில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்தவருமான திமுக தலைவரும் மக்கள் போற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரப்பூர்வமாக விடுக்கும் அறிக்கைக்குப் பதில் சொல்ல முடியாமல் அவதூறுகளை அள்ளி வீசுவது கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி, பாண்டியராஜன் வரை எல்லோருக்கும் வழக்கமாக இருக்கிறது.

திமுக நீதியை நம்புகிற எதிர்கொள்கிற இயக்கம். வாய்தா வாங்கி காலத்தை ஓட்டிய வரலாறு எங்களுக்குக் கிடையாது. நேருக்கு நேராக எதிர்கொண்டு, பொய் வழக்குகளைப் பொடிப்பொடியாக்கியவர்கள். ஆனால், அதிமுக என்பது ஊழலுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கே அகில இந்திய அளவில் அவமானத்தைத் தேடித்தந்த இயக்கம். அப்போது நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, ஆளுங்கட்சியினர் ஆதரவாக நின்று, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, போக்குவரத்தை முடக்கி, கடையடைப்பு - கலவரங்களை உருவாக்கி, தீர்ப்பளித்த நீதிபதியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இழிவு ஏற்படுத்திய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வரில் தொடங்கி ராஜேந்திர பாலாஜி வரையிலான அத்தனை பேரும்.

Minister Rajendra Balaji himself admitted the facts..kkssr ramachandran

அதன்வழியில்தான், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்த மாஜிஸ்திரேட்டை காவல் துறையினர் மிரட்டியிருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நீதித்துறை நடுவரிடம் உண்மையைச் சொன்ன பெண் தலைமைக் காவலர் உயிர் பயத்தில் இருப்பதையும், ஒரு காவலருக்கே காவல்துறையினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டிய அளவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் தமிழகம் இதுவரை கண்டதில்லை. அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் தமிழகம் சிக்கியிருக்கிறது.மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவர்கள் கேட்கும் நியாயத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுக தலைவரை விமர்சிக்க வேண்டாம் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆவேசமாக கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios