திமுக தலைமைக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தான் களத்திற்கு வந்து போராட்டம் நடத்துவார்கள், ஆனால் விருதுநகர் மாவட்டமே திமுக தொண்டர்களால் பதற்றம் அடைந்த சூழலில் மாவட்டச் செயலாளர்கள் இருவரும் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஸ்பெட்கரம் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தன்னுடன் விவாதத்திற்கு வரத்தயாரா என்று சொடக்கு போட்டு அழைத்தார் ஆ.ராசா. அதோடு மட்டும் அல்லாமல் பாஜக தலைவர்களின் பின்பக்கத்தில் கழுவி பிழைக்கும் அதிமுக என்கிற ரீதியில் ஆ.ராசா பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவு தினத்தன்று அவரை கொள்ளைக்காரி என்று உச்சநீதிமன்றம் கூறியதாக ஆ.ராசா கூடுதல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பால்வளத்துறை அமைச்சரும் விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளரான கே.டி.ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்தார். பேச்சின் போது அவர் ஆ.ராசாவை மட்டும் அல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி போன்றோரை ஒருமையில் பேசினார். அத்தோடு மட்டும் அல்லாமல் ஸ்டாலின் எதற்காக வெளிநாடு சென்று வருகிறார் தலையில் டோப்பா மாட்டாத்தான் என்று ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சு திமுகவினரை கொதிக்க வைத்தது. இதனை அடுத்து நேற்று முழுவதும் விருதுநகர் மாவட்டத்தில் திமுகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ராஜபாளையத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருவதை அறிந்து அவருக்கு எதிர்ப்பை காட்ட ஏராளமானோர் அங்கு திரண்டனர். இந்த தகவலை அறிந்து அதிமுகவினர் அங்கு கூடினர். ஒரு கட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி செறுப்புகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதனால் கடுப்பான போலீசார் இரண்டு  தரப்பையும் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தின் போது திமுக தொண்டர்கள் சிலர் காயம் அடைந்தனர். இதே போன்று சிவகாசி பேருந்து நிலையம் அருகே கூடிய திமுகவினர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரித்தனர்.

இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உருவ பொம்மையை எரிக்க முயன்றவர்களை போலீசார் பிடித்து அழைத்துச் சென்றனர். விருதுநகரிலும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவினர் பேரணியாக சென்று அவரது உருவபொம்மையை எரித்தனர். காரியாப்பட்டி எனும் பகுதியிலும் கூட திமுகவினர் அமைச்சருக்கு எதிராக போர்க்கோளம் பூண்டனர். போதாக்குறைக்கு ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது திமுக தொண்டர் ஒருவர் மீது தீ பற்றியது.

இப்படி மு.க.ஸ்டாலினை அவமதித்துவிட்டதாக கூறி விருதுநகர் மாவட்டம் முழுவதுமே திமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதலும் மூண்டது. இதனால் திமுகவினர் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில திமுக தொண்டர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதில் கொடுமை என்ன என்றால் திமுக மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவை போராட்ட களத்தில் எங்கும் பார்க்க முடியவில்லை.

வழக்கமாக திமுக போராட்டம் என்றால் மாவட்டச் செயலாளர்கள் தான் முன்னால் நிற்பார்கள். ஆனால் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான போராட்டத்தில் எந்த இடத்திலும் மருந்துக்கு கூட மாவட்டச் செயலாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசுவை காணவில்லை. தொண்டர்களை அனுப்பிவிட்டு மாவட்டச் செயலாளர்கள் இருவரும் வீட்டில் பதுங்கிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. எம்எல்ஏ சீட், எம்பி சீட், கட்சிப் பதவி என்றால் முன்னால் நிற்கும் மாவட்டச் செயலாளர்கள் தலைவருக்கு ஒரு அவமதிப்பு என்றால் களத்திற்கு வராமல் வீட்டிற்குள் இருந்தால் எப்படி என்று அக்கட்சி தொண்டர்களே கேட்க ஆரம்பித்துள்ளனர்.