எடப்பாடியார் கண் அசைத்தால் போதும், திமுகவே இருக்காது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுகவின் தலைவர்கள் வேலூரில் குவிந்துள்ளதால், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். இதேபோல தேர்தல் பிரசாரத்தில் திமுகவையும் மு.க. ஸ்டாலினையும் விமர்சித்துவருகிறார்கள்.
 எப்போதும் அதிரடியாக கருத்து கூறும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கே.வி.குப்பம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வென்ற எண்ணிக்கையையும் அதிமுக வென்ற எண்ணிக்கையையும் சேர்ந்து வைத்து பேசி கலகலப்பூட்டினார்.

 
 “எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு ஜாதகப் பொருத்தமே கிடையாது. ஆனால். எங்க அண்ணன் எடப்பாடியாருக்கு 8 ஜாதகப் பொருத்தமும் இருக்கு. எடப்பாடியார் கண் அசைத்தால் போதும், திமுகவே இருக்காது, அவ்வளவுதான். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் ஜெயிச்சது. அதிமுக 9 இடங்களில் ஜெயிச்சது. இதுல 13 என்ற எண் பேய்களோட நம்பர். ஆனால், 9 என்பது நவரத்தினங்களின் எண். அதிமுக நவரத்தினங்களைப் பெற்றிருக்கிறது” என எடக்குமடக்காகப் பேசினார் ராஜேந்திர பாலாஜி.