பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதையடுத்து அவரது உருவபொம்மையை திமுகவினர் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலரும் பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி நேற்று அளித்த பேட்டியில்;- 2ஜியில் ஊழல் செய்த பணத்தைப் ஆ.ராசா பதுக்கி வைத்துள்ளார். அதனால்தான் ராசாவை கூடவே வைத்துள்ளார் ஸ்டாலின். ஜெயலலிதாவையோ, எடப்பாடியையோ பற்றி பேச ஸ்டாலினுக்கோ, ஆ.ராசவுக்கோ தகுதியில்லை பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இந்நிலையில், அமைச்சரின் அவதூறு பேச்சைக் கண்டித்து விருதுநகர் தேசபந்து திடலில் இன்று காலை திமுகவினர் குவிந்தனர். எம்எல்ஏ சீனிவாசன் தலைமையிலான திமுகவினர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தகவலறிந்த போலீஸார் சுற்றி வளைத்து உருவ பொம்மையைப் பறித்துச் சென்றனர். அப்பொழுது திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதனையடுத்து, அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும் தகவலறிந்து அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஸ்டாலின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.