விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் பகுதியில் கரோனா வைரஸ்  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக  அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,   சாத்தூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ,  பொதுமக்களிடம் தனித்து இரு விழித்திரு என்பதன் முக்கியத்துவத்தையும்,  தனிமைப்படுத்துவதன் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு அதிகாரிகள் விளக்க வேண்டும் என்றார்,  மேலும்  தூய்மை பணியாளர்கள் மூலம் நகர்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் சுகாதாரம் குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.


 

மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் அடங்கிய தொகுப்பு பையில்  1000 ரூபாய் பணத்தை தன்னார்வலர்கள் மூலம்  வீடுதோறும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார், தொடர்ந்து பேசிய அவர்,   தற்போது விடுமுறையில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் கொரோனா வைரஸுக்கு பயந்து மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் விடுமுறையில் சென்றுள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான தீப்பெட்டியின் உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ளவும்  தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களை  வைத்து பணியாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  அதன் படி உற்பத்தி தங்குதடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

 

மேலும் சமூக சிந்தனையுடன் இரவு பகலாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளால்தான்  தமிழகத்துக்கு உள்ளே வருவதற்கு கரோனா பயந்து கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். மேலும் இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்,வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவர்கள், நகராட்சி ஆணையாளர், சாத்தூர் மருத்துவ அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் என அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.