முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குட்புக்கில் மீண்டும் இடம்பிடித்துவிட்டதால் விரைவில் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏசியாநெட் தமிழ் கூறியதுபடியே நடந்துள்ளது.

தமிழக அமைச்சர்களில் மற்ற யாருக்கும் இல்லாத துணிச்சல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உண்டு. திமுக தலைவர் ஸ்டாலின் முதல் கமல் வரை யாராக இருந்தாலும் கடுமையான வார்த்தைகளுடன் விமர்சனம் செய்யக்கூடியவர். ஜெயலலிதாவுடன் தனக்கு இருந்த பழக்கம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது முதல் பிரபலமானார். சில விஷயங்களில் அவரது பேச்சு சர்ச்சையானாலும் அனைத்தும் செய்தியானது. இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு பிரதமர் மோடிக்கு மிகவும் ஆதரவான கருத்துகளை ராஜேந்திர பாலாஜி கூறி வந்தார். இதே போல் ரஜினியையும் அதிகம் அவர் புகழ்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி பேசுவதாக புகார் எழுந்தது. மேலும் அவர் இந்துத்துவ அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ரஜினியை சென்று பார்த்து வந்துவிட்டார் விரைவில் ரஜினி கட்சியில் இணைவார் என்றும் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. கட்சிப் பதவி பறிக்கப்பட்ட பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார். விருதுநகர் மாவட்ட அளவிலும் அமைச்சரை கட்சி நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மிக நெருக்கமானவராக இருந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனே அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்தார். விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை பெற்றுவிடும் முனைப்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ராஜவர்மன் தூபம் போட்டு வந்தார். இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டுவிடுவார் என்று பேச்சுகள் அடிபட்டன.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடிரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ராஜேந்திர பாலாஜி. அந்த அறிக்கையை முதலமைச்சரின் நேரடிக ட்டுப்பாட்டில் உள்ள டிஐபிஆரில் இருந்துஅனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி ஒளிபரப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் ஊடகங்கள் மத்தியில் ராஜேந்திரபாலாஜிக்கு இருந்த புகழ் உதவியது. ராஜேந்திர பாலாஜி செய்தி என்றால் ஊடங்கள் முன்னிலைப்படுத்துவதால் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ராஜேந்திர பாலாஜி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க ஆரம்பித்தார். முதலமைச்சரை குறி வைத்து திமுக தரப்பில் இருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு தனக்கே உரிய அதிரடி முறையில் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்து வந்தார். இதனால் மீண்டும் முதலமைச்சரின் குட்புக்கில் ராஜேந்திர பாலாஜி இடம் பெற்றார். இந்த நிலையில் நேற்று திடீரென விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்றாலும் அதற்கு இணையான பொறுப்பாளர் பதவி ராஜேந்திர பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மாதமே ஆசியா நெட் தமிழ் கூறியிருந்தது. அதன்படியே தற்போது நடைபெற்றள்ளது. ராஜேந்திர பாலாஜி கட்சிப்பதவியை இழந்த போது அவருக்கு எதிராக அரசியல் செய்தி அதிமுக நிர்வாகிகள் சிலர் கலக்கத்தில் இருக்கின்றனர் என்பதே உண்மை. அதிலும் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனின் நிலை தான் ரொம்ப கஷ்டம் என்கிறார்கள்.