விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கூட கூறத் தயங்கும் கருத்துகளை மிகவும் துணிச்சலாக கூறி வந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஒரு கட்டத்தில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். அதே சமயம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சில கருத்துகளை ராஜேந்திர பாலாஜி பேச அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாக ரஜினியை ஆதரித்து ராஜேந்திர பாலாஜி பேசியது எடப்பாடி பழனிசாமியை எரிச்சல் அடைய வைத்தது. பலமுறை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறியும் ராஜேந்திர பாலாஜி தனது பேச்சு வழக்கை மாற்றவில்லை. 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டார். எனினும் பதவி நீக்கத்திற்கான காரணத்தை அதிமுக தலைமை தெரிவிக்கவில்லை. அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட 3 மாதங்களில் அதே பதவியை மீண்டும் அவருக்கே கொடுக்க தற்போது அதிமுக தலைமை முன்வந்துள்ளது,.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, அம்மாவட்ட பணிகளை அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.