தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவின் கனவு பலிக்காது... இந்தியா கூட்டணியே வெல்லும்- ராஜகண்ணப்பன் சூளுரை
மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் முதலவர் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி ஆட்சி
புதுச்சேரியில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமான திராவிட முன்னேற்ற கழகத்தை தமிழக மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியான இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். தமிழகத்தின் திராவிட மாடலை முன்னுதாரணமாக கொண்டு இந்தியா கூட்டணி ஆட்சி புரியும் என தெரிவித்தார்.
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார். ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை. எனவே தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம். புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும் என கூறினார்.
மிரட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம்
இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்ட அவர், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஏன் ஜனாதிபதி அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வைத்து எதிர்கட்சிகள் மிரட்டப்படுவதாக கூறினார். இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம்(திமுக) நாங்கள் பயப்பட மாட்டோம் இதற்கெல்லாம் திமுக அடிபணியாது எனவும் தெரிவித்தார். முதல்வர் முக ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை, எந்த மலை வந்தாலும் முதல்வர் மு. க ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது என ஆவேசமாக பேசினார்.
புதுவையில் திமுக ஆட்சி
தொடர்ந்து பேசிய அவர், புதுவையிலும் திமுக ஆட்சி அமைய சிவா பல முன்னேற்பாடுகளை எடுத்து வருகிறார். எனவே வருகிற தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதுச்சேரியிலும் திமுக மாடல் அரசு அமையும் எனவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
வரும் மக்களவைத் தேர்தலில் டிடிவி. தினகரன் போட்டியா? எந்த தொகுதியில்? அவரே சொன்ன தகவல்..!