“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !
கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர்.
காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே இந்திய ராணுவ முகாமிற்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர் ஆவார். மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுபட்டியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியின் மகன் லட்சுமணன்.
2019 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது .மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர்.
பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர், இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர். மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்தச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் பிடிஆர் மீது தாக்குதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என் நேரு, ‘எதை கையில் எடுக்கிறார்களோ, அதையே அவர்கள் அனுபவிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.
அதேபோல இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதினை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘அமைச்சர் பிடிஆர் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். திமுகவினர் மட்டுமல்லாமல், பொதுமக்களும் இந்த சம்பவம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஒருவர், ‘முதல்வர் ஸ்டாலினின் கீழ் தமிழக காவல்துறையின் இமேஜ் குறைந்து வருகிறது என்று சொல்ல வேண்டும். இது வெட்கக்கேடானது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எந்த அதிமுக அமைச்சர் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடந்திருக்குமா ? காவல்துறையினர் அவர்களைத் தள்ளிவிட்ட போதிலும், தாக்குபவர்கள் காரைப் பின்தொடர்ந்தால், அவர்கள் காவல்துறைக்கு பயப்படவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு பதிவில், ‘10 வருடம் போராடி கழகத்தை ஆட்சியில் அமரவைக்க இரவு பகல் பாராமல் உழைத்தது செருப்படி வாங்கவா தலைவரே.? இதுக்கு போங்க தலைவரே’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘இதுவே அதிமுக அமைச்சர் மீது ஜெயலலிதா இருக்கும்போது பண்ணியிருந்தா ஒரு பிஜேபிகாரன் வேட்டியோடு திரும்ப போயிருக்க முடியாது. திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. ஆனால் நாகரிக அரசியலால் திமுக தன்னையே அழித்து கொள்ள தொடங்குகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
‘அதிமுக ஆட்சில இருந்தப்போ கூட திமுக காரன் மேல கை வைக்க பயந்த பாஜக இன்னைக்கு நிதி அமைச்சர் கார் மேலயே செருப்பு வீசுற அளவுக்கு தைரியமா இருக்கானுக. எங்களை நீங்க காப்பாத்து வேணாம் விடுங்க. உங்களையே காப்பாத்திக்க முடியாத பரிதாப நிலையில் இருக்கீங்க பாருங்க. அதான் பெரிய கொடுமை’ என்று பதிவிட்டுள்ளார்.