’அரசியலிலிருந்து புத்திசாலித்தனமாக ஒதுங்கியதன் மூலம் ரஜினி தான் ஒரு சாணக்கியன் என்பதை நிரூபித்துவிட்டார்’ என்கிறார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்று அறிவித்திருந்த ரஜினி சற்றுமுன்னர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசியபோது  இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 21 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் தனக்கு  இல்லை என்று அறிவித்து அ.தி.மு.க. தலைவர்கள் நெஞ்சில் பால்வார்த்திருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினியை அரசியல் சாணக்கியன் என்று வானளாவ புகழ்ந்துள்ளார்.
சற்றுமுன்னர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,’’நடிகர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்துவிட்டது. நடிகர்கள், வியாபார நோக்கத்துடன் தான் அரசியலுக்கு வருகிறார்கள். வரும் நாடாளுமன்றத்துக்குப் பிறகு, கட்சி தொடங்கி, அரசியலுக்கு வந்த நடிகர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்கள். ரஜினிகாந்த் அரசியலை விட்டு ஒதுங்கியிருப்பது அவருடைய சாணக்கியத்தனத்தைக் காட்டுகிறது’ என்று கூறியிருக்கிறார்.

மனதளவில் எப்போதும் பி.ஜே.பி. ஆதரவாளரான ரஜினி, அதிமுக-பிஜேபி கூட்டணியில் விஜயகாந்தை இணைத்து வைக்க முயற்சித்ததில் தொடங்கி, ‘எதற்காகவும் போராட்டம் நடத்தக் கூடாது’ என்று தனது ரசிகர் மன்றத்தினரை எச்சரித்தது வரை மிகத் தெளிவாக தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.