7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மட்டுமல்லாது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் கல்விக் கனவை நிறைவேற்றி வரும் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மட்டுமல்லாது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் கல்விக் கனவை நிறைவேற்றி வரும் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பதிலுரை வழங்கிய அமைச்சர் பொன்முடி,பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, கிராமப்புற மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசுக் கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 10 இடங்களில் ரூ.166.5 கோடி மதிப்பில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார்.
2016-17ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை தொடங்கப்பட்ட 16 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.199.36 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் உயர் கல்வி வளர்ச்சி என்றாலே அது கலைஞரின் ஆட்சி தான் என அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 51 என்பது 2019ல் எடுக்கப்பட்ட கணக்கீடு என்றும், தற்போது கணக்கெடுத்தால் 55 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கும் என தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் 7.5% கொண்டுவரப்பட்டாலும் ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக போராடி அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற காரணமானது திமுக தான் எனக்கூறினார். அதன் நீட்சியாக தற்போது பொறியியல், சட்டம், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்கள் கல்விக் கனவை நிறைவேற்றி வரும் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என பெருமையுடன் கூறினார்.
உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் 1000 கொடுப்பதன் மூலம் இனி அனைத்து மாணவிகளும் உயர் கல்வி கட்டாயம் படிக்கவேண்டிய சூழலை உருவாக்கி, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மட்டுமல்லாது, கல்வியின் தரத்தையும் உயர்த்துவது தான் முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டம் என தெரிவித்தார்.
