தோல்விக்கு நானும் பொறுப்பு..! மனம் திறந்த அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்..! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில், பாஜக வின் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்தடைந்த பொன் ராதாகிருஷ்ணன் சுவாமியின் தரிசனம் முடித்துக்கொண்டு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மோடியின் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் வரை எடுத்துச் செல்லாமல் போனதற்கு நானும் ஒரு காரணம். 

1967 ஆம் ஆண்டு முதலே திமுக தமிழகத்தில் பல்வேறு பொய்  வாக்குறுதிகளைக் கொடுத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மக்களும் அவர்கள் பேச்சைக் கேட்டு நம்பி ஏமாந்து வருகிறார்கள். மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.. ஆனால் இதே தமிழகத்தில் வேலை நிமித்தமாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால் இந்தியை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என தொடர்ந்து பேசினார்.

மேலும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் தோல்வியுற்றதால் 3 மாணவிகள் இறந்துள்ள செய்தி மனதை மிகவும் காயப்படுத்தியது. 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் இயங்கும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ள ஒரு சம்பவத்திற்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். அதற்கேற்றவாறு பாதுகாப்பையும் அளித்து உறுதிப்படுத்த வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.