தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலட்சியத்தால் அவரது கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்ததாக ஓட்டுநரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அமைச்சர் ஒ.எஸ். மணியனின் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் சவுந்திரராஜன். இவர்  சூளைமேடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமைச்சருக்கு கார் ஓட்டுவதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.எஸ். மணியன் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

வழக்கம் போல் இன்றும் அமைச்சரை அழைக்க கார் ஓட்டுநர் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரை அழைத்து செல்வதற்காக காரை சுத்தப்படுத்திவிட்டு அமைச்சரை காரில் ஏறும்படி அழைத்திருக்கிறார் ஓட்டுநர். 

அப்போது திடீரென சவுந்திரராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு அமைச்சர் முதலுதவிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

ஓட்டுநருக்கு உதவாமால் அமைச்சர் வீட்டுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், மற்றொரு ஊழியரிடம் சவுந்திரராஜனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. 

இதையடுத்து ஊழியர் இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் சவுந்திரராஜனை பின்னால் அமர வைத்து சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார். 

அப்போது வலிதாங்காமல் சவுந்திராஜன் கீழே விழுந்து மண்டை உடைந்தது. அதில் ஓட்டுநர் சவுந்திரராஜன் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் இந்த இரக்கமற்ற செயலால் ஓட்டுநர் உயிரிழந்தார் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

ஓட்டுநர் சவுந்திரராஜன் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  உறவினர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். 

உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் ஓட்டுநர் சவுந்திரராஜன் மரணமடைந்ததாக புகார் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து முடிந்தால் தம் மீது போலீசில் புகார் தருமாறு ஓட்டுநர் உறவினர்களிடம் ஓ.எஸ்.மணியன் சவால் விடுத்ததாக கூறப்படுகிறது.