குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களைப் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என விமர்சித்த மீரட் போலீஸ் எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.


குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் ஓயவில்லை. இஸ்லாமியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் சிரமப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது இரு போராட்டக்காரர்களிடம் மீரட் நகர காவல் உயரதிகாரி அகிலேஷ் நாராயண் சிங், “உங்களுக்கு இங்கு வசிக்க விருப்பமில்லையெனில் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள், இங்கு இருப்பீர்கள். ஆனால், இன்னொன்றை புகழ்ந்து பேசுவீர்களா? ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அனைவரையும் சிறையில் தள்ளி விடுவேன். அழித்து விடுவேன்” எனப் பேசியது வீடியோவில் பதிவானதாக கூறப்படுகிறது. 
போலீஸ் உயரதிகாரியின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது. மோடி அரசில் சிறுபான்மை நலத் துறை அமைச்சராக இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வியும் போலீஸ் உயரதிகாரியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வீடியோவில் அந்த போலீஸ் அதிகாரி கூறியிருப்பது உண்மை என்றால், அது கண்டனத்திற்குரியது. அவர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட யாருக்கும் இடமில்லை.அது, கும்பலாக இருந்தாலும் சரி, போலீசாக இருந்தாலும் ஜனநாயக நாட்டில் அதற்கு இடமில்லை. அப்பாவி மக்கள் பாதிப்படையாதவாறு பாதுகாப்பது மட்டுமே போலீஸின் கடமை” என்றார்.