அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விருப்பப் பாடமாக இந்தியைத் தேர்வு செய்து படிப்பதில் என்ன தவறு உள்ளது?
உலகத் தமிழ் ஆராய்ச்சியில் முதுகலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தி பிரச்சார் சபாவுடன் இணைந்து இந்தி கற்று தருவதற்உ 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாஃபா பாண்டியராஜனைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கம்  தென்னரசு அறிக்கையும் வெளியிட்டார். இந்நிலையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக்கொடுப்பது பற்றி மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

 
 “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 101 மாணவர்கள் படிக்கிறார்கள். மாணவர்கள் பல மொழிகளை அறிய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் மாணவர்கள் விருப்பப் பாடமாக ஒரு அயல்நாட்டு மொழியையும், ஒரு தேசிய மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில்தான் மாணவர்களின் விருப்பப்படியே இந்தி மற்றும் பிரெஞ்சு கற்பிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் வேறு மொழி பாடங்களும் கற்பிக்கப்படும். தமிழ் வளர்ச்சித்துறையின் திட்டங்களை இதற்கு முன்பு திமுகவே பாராட்டியுள்ளது. ஆனால், தற்போது நச்சு கருத்துகளை தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுகவினர் பரப்புகிறார்கள். தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் பலவற்றை திமுகவினர்தான் நடத்திவருகிறார்கள். அந்தப் பள்ளிகளில் எல்லாம் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விருப்பப் பாடமாக இந்தியைத் தேர்வு செய்து படிப்பதில் என்ன தவறு உள்ளது?


எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு ஏதேம் இல்லை. தமிழக இளைஞர்கள் அறியாமை என்ற இருளில் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். இது நாள்வரை அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே திமுக முட்டுக்கட்டை போட்டு வந்தது. இப்போது தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கும் முட்டுக்கட்டையைத் திமுக போடுகிறது. தமிழாய்வு மாணவர்களை பன்மொழி இலக்கிய ஒப்பாய்வு செய்ய வைப்பதே உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் லட்சியம். அடுத்த ஆண்டு சேலம், கோவை, திருச்சி ஆகிய  நகரங்களில் ஓரிடத்தில் உலகத் தமிழ் மாநாடு நடைபெறும்.” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.