வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 30,192 பேர் பாதிக்கப்படுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 20,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் செங்கல்பட்டும், 3வது இடத்தில் திருவள்ளூர் மாவட்டமும் உள்ளது. 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் 37 வயது வாலிபர், புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில்  மருத்துவரின் கார் ஓட்டுநராக உள்ளார். இவர் சென்னையில் கடந்த 10 நாளாக சுகாதாரத்துறையில் ஓட்டுநர் பணிக்காக சென்று வந்தார்.  இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை இவர் பணிக்காக மீண்டும் சென்னைக்கு சென்றார். 

அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் உடனே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் அந்த வாலிபரை வேலூருக்கு அனுப்பி வைக்க கூறினார். தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் வசித்து வந்த பாசம்பேட்டை பகுதி தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.