தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு எக்மோ கருவி மூலம் நேற்று இரவு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அமைச்சர் காமராஜ் சென்னை செல்லும்போது அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 5ம் தேதி ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் கொரோனா பாசிட்டிவ் என்று தகவல் வெளியானது. பின் கொரோனா இல்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் தொடர் சிகிச்சையில் அங்கேயே இருந்த அமைச்சர் பொங்கலுக்கு முன்னால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் அமைச்சருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஜனவரி 19ம் தேதி காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இதனையடுத்து, திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அமைச்சர் காமராஜை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கம் பகுதியில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், எக்மோ கருவி மூலம் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் காமராஜின் உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று இரவு முதல்வரும், துணை முதல்வரும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் கேட்டறிந்தனர்.