முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு முழு மெஜாரிட்டியுடன் உள்ளது என்றும், ஆளுநர் சட்டப்படியே நடந்து கொள்கிறார் எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதால், அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக நேற்று ஆளுநரை சந்தித்து, அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்துக்குள், முதலமைச்சர் எடப்பா பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார், அரசியல் அமைப்பு சட்டப்படியே கவர்னர் செயல்பட முடியும் என்றும்  அறுதிப் பெரும்பான்மை கொண்ட அரசாகத்தான் தற்போதைய அரசு உள்ளது என கூறினார்..

ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்ள தயார் என  குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், தைரியம் இருந்தா.. தெம்பிருந்தா..துணிவிருந்தா.. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாங்க என சவால் விட்டார்.