வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை வண்ணாரப்பேட்டையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- கமல் முதலில் தனியாக நிற்பேன் என்றார். தற்போது ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்குமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள் வேறு யாருக்கும் போடாது. எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது. எம்.ஜி.ஆர் 10 கோடி தமிழர்களுக்கும் சொந்தம் என்றார்.

எம்.ஜி.ஆர் படத்தை போஸ்டரில் சிறியதாக்கியவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என்ற கமல் கருத்துக்கு பதில் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியது அதிமுக. கமல் மூன்றாவது அணியல்ல; நான்காவது அணி அமைத்தாலும் அது பிணியாகத்தான் போகும் என பதிலளித்தார்.

கமலின் விஸ்வரூபம் படத்தை தடை செய்தபோது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், உள் ஒன்று வைத்து கமல்ஹாசன் பேசி வருவதாகவும், எம்.ஜி.ஆர் வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராக தான் போவார்கள் என்றும், இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் உறுதிப்பட கூறினார்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ணமும் 2021ல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் என குறிப்பிட்ட அவர், மற்ற கட்சிகள் எப்படி எம்.ஜி.ஆரை சொந்த கொண்டாடலாம் என்றும், கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் எனவும் விமர்சனம் செய்தார்.