அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்ததில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக நேற்று திமுக தலைவவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அதிமுகவின் கதை புத்தகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி எல்லோரையும் கடுமையாக விமர்சித்த அந்த பெரிய மனிதர் ராமதாஸ் இன்று அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். ராமதாஸுக்கு வெட்கம் இல்லை. சூடு, சொரணை இல்லையா என கடுமையாக சாடினார். 

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்; சந்தர்ப்பவாதத்தை பற்றியும், கூட்டணி மாறுவது குறித்தும் பேசுவதற்கு தி.மு.கவிற்கு தகுதி இல்லை என்றார். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்த விரக்தியில் ஸ்டாலின் பேசி வருகிறார் என ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அதிமுக கூட்டணி பற்றி மு.க.ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்தது என்றார்.