ஹீரோவாக தன்னை சித்தரிக்க முயற்சி செய்து டி.டி.வி. தினகரன் தற்போது ஜீரோவாகிவிட்டதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அமைச்சரவையில் 2 இடங்கள் கேட்பதாக வெளியாகும் தகவல் அதிகாரப்பூர்வமற்றது என்று பதிலளித்தார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். பதவி கேட்டு நாங்கள் யாரையும் அணுகுவது இல்லை. மோடி பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது சந்தர்ப்பவாதம். நேரத்திற்கு தகுந்தாற்போல ஆதாயம் தேடி பறக்கும் கொக்கை போன்றது திமுக. 

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஆட்சி நிச்சயம் கலையும் என்று கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மு.க.ஸ்டாலின் பாணியில் வெயிட் அண்ட் ஸீ என்று ஜெயக்குமார் பதிலளித்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பது தொடர்பாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். 

எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு. எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதி தான். வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான். தன்னை கதாநாயகனாக சித்தரிக்க பலகோடிகள் செலவழித்த தினகரன் தற்போது பூஜ்ஜியத்தில் இருக்கிறார். 300 வாக்கு சாவடி மையங்களில் 0 வாக்கு பதிவானதால் அவர் பூஜ்ஜிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.