’சின்னத்தம்பிகளான மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது’ எனத் தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணியை அறிவிப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது மட்டுமே அக்கட்சியில் லேட்டஸ் அப்டேட்.

 

இந்நிலையில் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘’மக்களவை தேர்தலில் லேட்டாக புறப்பட்டாலும் லேட்டஸ்டாக புறப்பட்டுள்ளோம். சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிப்போம். விருப்ப மனு வாங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. அதிமுகவை அழிக்க லெட்டர் பேடு கட்சிகளை சிலர் தொடங்கியுள்ளனர். 

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி எனது நண்பர். எனவே பண்பாடு கருதி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளோம். காய்த்த மரம்தான் கல்லடிப்படும் என்பதை போல் அதிமுகவை அனைவரும் குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆட்சி அமைக்க திமுக எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும். அரசியலில் ஸ்டாலினும், தினகரனும் சின்னதம்பிகள். ஸ்டாலின் அவரதுப் அப்பாவின் தயவில் திமுகவுக்கு சின்னத்தம்பியாக இருக்கிறார். கொள்ளைப்பணத்தில் அமமுகவுக்கு டி.டி.வி.தினகரன் சின்னத்தம்பியாக இருக்கிறார். இது போன்ற சின்னத்தம்பிகள் ஏராளமானோர் உள்ளனர். இரு சின்னதம்பிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது’’ என அவர் கூறினார்.