Asianet News TamilAsianet News Tamil

எங்களின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் உங்களுக்கு புரியாது... ஸ்டாலினுக்கு அமைச்சரின் உருக்கமான பதிலடி!

சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த தி.மு.க.வினருக்கு, அ.தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது என உருக்கமாக பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

minister jayakumar reply to stalin

திமுக தலைவர் கருணாநிதி  கடந்த 9ஆம் தேதி காலமானார். அவருடைய உடலை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்ய ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மெரினாவில் இடமளிக்க இயலவில்லை என்றும் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கத் தயார் என தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மெரினாவில் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கலைஞரின் உடல் ராணுவ மரியாதையுடன் அண்ணா நினைவிடத்துக்கு வலது புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அதிமுக அரசின் காழ்ப்புணர்ச்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இதற்குப் பதிலளித்து நேற்று அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், இந்தச் சூழ்நிலையில் இதற்குப் பதிலளித்து நேற்று  அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், “எம்ஜிஆரோடு நெருங்கிய நட்பு கொண்டவரும், அண்ணாவிற்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் என்ற புகழுக்குரியவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 95 வயதில் காலமானார் என்ற துயர நிகழ்வு நடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே முரசொலியில் வந்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில் காணப்படும் அபாண்டமான குற்றச்சாட்டும், நஞ்சை விதைக்கும் பழிச்சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.

minister jayakumar reply to stalin

அண்ணாவின் இதயத்தை கடனாக வாங்கி இருப்பதால் அதை திருப்பித்தருவதற்காக அண்ணா சமாதி அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்று அண்ணாசதுக்கத்தில் இடம் கேட்டதாகவும், அந்த வேண்டுகோளை காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணாசதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார் என்று மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் நச்சுக்கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு உள்ளார்ந்த மரியாதையுடனும், அக்கறையுடனும், அ.தி.மு.க. அரசு செய்திருக்கும் சிறப்புகளை பட்டியலிட்டு கூறும் நிலைக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் நம்மை தள்ளியிருக்கிறது. சொல்லிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு சிறிதும் இல்லை. ஆனால் பதிவு செய்வது வரலாற்று கட்டாயம் என்பதால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புகழை போற்ற தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பட்டியலிடுகிறோம்.

இறுதிச்சடங்கு நாளான 8-ந்தேதி மாநில அரசு அலுவலகங்கள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. கருணாநிதியின் பூத உடல் மக்களின் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைப்பதற்கு அனுமதி வழங்கியது. அன்னாரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் செல்வதற்கும், மீண்டும் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு வைத்தும், பின்னர் அங்கிருந்து கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் வரையிலும் காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அனுமதி பெற்று, அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறந்தது, சவப்பெட்டி மீது தேசியக்கொடி போர்த்தியது, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின் போது குண்டுகள் முழங்கியது, முதலான அரசு மரியாதை செலுத்தப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறப்பது மற்றும் அரசு சார்ந்த விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது.

மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக 5 மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன. ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்திவிடத் துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள் தான் அவை ஐந்தும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, 5 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் தான் அண்ணாசதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போய், நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்துவிடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி?.

ஜெயலலிதா படத்தை சட்டசபைக்குள் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகடியம் பேசிய தி.மு.க.வினருக்கு, மெரினா கடற்கரையில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என்று மேடை போட்டு பேசிய தி.மு.க.வினருக்கு மனசாட்சி இருக்கிறதா? என்ற கேள்வியே எழுகிறது.

குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, சரித்திர நிகழ்வு என்பதற்காகவும், பழமையை மறந்தோர்க்கு எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமுமே கூட வழிகாட்ட ஒளியின்றி தடுமாற்றம் ஏற்படுத்திவிடும் என்பதற்காக ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். பெருந்தலைவர் காமராஜர் மறைந்த போதும், தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பணியாற்றிய ஜானகி மறைந்த போதும், அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

முதல்-அமைச்சராகவே இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான் மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று, வழக்குகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட மறுத்தவர் தான் மறைந்த கருணாநிதி என்று, அந்த நிகழ்வுகளின் போது அவரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்றைக்கும் நம்முடன் வாழ்கிறார்கள். அவர்கள் கூறிய தகவல்கள் தான் இவை என்பதை நினைவூட்டுகிறேன்.

minister jayakumar reply to stalin

தாங்கள் ஏதோ போதிமரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தபெருமான் போலவும், அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களைப் போலவும், தாங்கள் அள்ளிக்குவித்து வைத்திருக்கும் ஆயிரம் தலைமுறைக்கான செல்வம் தங்கள் அயராத உழைப்பாலும், அறிவுத்திறத்தாலும் வந்தது போலவும், ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு, சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த தி.மு.க.வினருக்கு, அ.தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது. புரியவே புரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சமூகம் நன்கு புரிந்துகொள்ளும்.

காட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், எல்லோருக்கும் எல்லாமும் ஆகி தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் அண்ணன்மார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாங்களும், தி.மு.க. தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவதுமில்லை; கடமை தவறப்போவதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios