கமலின் திரைப்படத்திலும் நாகரிகம் இல்லை, அரசியலிலும் நாகரிகம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைதேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் விஷவிதைகளை விதைத்து கமல், குளிர்காய நினைக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசக்கூடாது. மேலும் கமல் நடித்த திரைப்படங்களிலும், அவரின் அரசியலிலும் நாகரிகம் இல்லை. தாம் செய்தது தவறு என கமல் உணர வேண்டும். 

மேலும் அவர் பேசுகையில் மே 23-ம் தேர்தல் முடிவுக்கு பிறகு அமமுகவில் சேர்ந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகவே உள்ளது. தமிழ் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் 7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.