சசிகலா, தினகரன் ஆகியோர் Delink  செய்யப்பட்டவர்கள்…அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை… அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேட்டி…

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துள்ளார் என்றும் சசிகலா, தினகரன் ஆகியோர் டி லிங்க் செய்யப்பட்வர்கள் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி,ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. ஆனால் தற்போது சசிகலா அணி இரண்டாக உடைந்துள்ளது.

சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் தரப்பினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக தினகரன் தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு கட்சியில் புதிய பதவிகளை நேற்று தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி, தொடர வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் விரும்புவதாக கூறினார்

இந்த ஆட்சியை சிலர் கவிழ்க்க முயல்வதாகவும், அப்படி ஒன்று  நடக்காமல் இருக்க ஓபிஎஸ் உதவி செய்வார் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.

சசிகலா,  தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து டி லிங்க் பண்ணப்பட்டவர்கள் என்றும் அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை என்றும் கூறினார்.

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே டி.டி.வி.தினகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.