அதிமுக ஆட்சியை கலைக்க சதி செய்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது….அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்…

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும்,  ஆட்சியை வீட்டுக்கு போகச்செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு உண்டான எல்லாவிதமான அநியாயங்களையும், சூழ்ச்சிகளையும்  செய்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார். இவருக்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,

துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை தீவிரமாக ஆதரிக்கும் எம்எல்ஏக்கள்  மற்றும்  நிர்வாகிகள் சிலர் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அண்மையில்  டி.டி.வி.தினகரன் திடீரென்று எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என 60 பேரை  பல்வேறு பதவிகளுக்கு நியமித்தார்.

அதிமுக அம்மா  அணியில் தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கத்திலேயே டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்து, அரசுக்கு நெருக்கடியை கொடுப்பதாக  எடப்பாடி பழனிசாமி  ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார்  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். 1½ கோடி தொண்டர்களோடு இந்த இயக்கம், இப்போது சீரான முறையிலே, சிறப்பான முறையிலே எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வருவதாக குறிப்பிட்டார்.

இந்த ஆட்சிக்கு  இடையூறு விளைவிக்க வேண்டும் என்கின்ற வகையில் டி.டி.வி.தினகரன் புதிய நிர்வாகிகளை நியமித்தாக தெரிவித்தார். இந்த நியமனம் செல்லாது எனவும் ஜெயகுமார் கூறினார்.

இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். ஆட்சியை வீட்டுக்கு போகச்செய்ய வேண்டும் என்று நினைத்து, அதற்கு உண்டான எல்லாவிதமான அநியாயங்களையும்,  சூழ்ச்சிகளையும்  செய்தால் நிச்சயம் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது என தெரிவித்தார்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது என்றும் அமைச்சர் ஜெயகுமார் காட்டமாக தெரிவித்தார்.