minister jayakumar opinion about mansoor ali khan arrest

வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் எல்லாம் சிறையில் தான் இருக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை - சேலம் பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்படும். அதனால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே சேலம் மாவட்டத்திற்கு சென்று நீர்நிலைகளை பார்வையிட்ட நடிகர் மன்சூர் அலிகான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, எட்டுவழிச்சாலையை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று ஆவேசமாக பேசினார். 

அதனால் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், மன்சூர் அலிகான் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதைமீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பேசுவதோ, சட்டத்தை கையில் எடுப்பதோ குற்றமாகும். அப்படிப்பட்டவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.