ரஜினியும் கமலும் தமிழக அரசியலில் இணைந்து செயல்பட்டால் புரட்சி ஏற்படாது; வறட்சிதான் ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ரஜினிகாந்தும் அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தில் புரட்சி ஏற்படும் என நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். 

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஷாலின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனக்கே உரிய பாணியில் கிண்டலாக பதிலளித்தார் ஜெயக்குமார். ரஜினியும் கமலும் இணைந்தால் தமிழகத்தில் புரட்சி எல்லாம் ஏற்படாது; வறட்சிதான் ஏற்படும் என ஜெயக்குமார் பதிலளித்தார். 

மேலும் ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு மற்றும் ஆளுநரின் ஆய்வுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசியலமைப்பு சட்டப்படித்தான் ஆளுநரும் அரசும் செயல்படுகிறது. நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில் ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்றார்.

மேலும் ஸ்டாலின் அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என மாறி மாறி பேசுகிறார். பொறுப்பு ஆளுநர் இருந்தபோது முழுநேர ஆளுநர் வேண்டும் என்றார். இப்போது நிலையான ஆளுநர் நியமிக்கப்பட்ட பிறகு ஆளுநரின் செயல்பாடு சரியில்லை என்கிறார் என ஸ்டாலினை விமர்சித்தார்.