minister jayakumar criticize h raja and sv sekar
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பெண் பத்திரிகையாளர் குறித்தும் தமிழ் மீடியாக்களில் பணிபுரியும் பெரும்பாலான செய்தியாளர்கள் என குறிப்பிட்டு அவர்களை மிகவும் இழிவாகவும் பதிவிட்டுள்ள எஸ்.வி.சேகருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் ஆளுநர் கை வைத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த பெண் பத்திரிகையாளரும் இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு எதிர்வினையாக பதிவிடுவதாக கருதி, அந்த பெண் பத்திரிகையாளரையும் ஒட்டுமொத்த தமிழ் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் விதமாக மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் மோசமாக எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், விளம்பரம் தேடும் வகையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவரும் எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என விமர்சித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களை எஸ்.வி.சேகர் தரக்குறைவாக பேசியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
