minister jayakumar condemns kamal
தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபலமடைய வேண்டும் என்பதால், தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன், செய்தியாளர்களை நேற்று சந்தித்து இது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் கமல் ஹாசன் பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், சிஸ்டம் சரியில்லை என்று, தான் ஒரு வருடத்துக்கு முன்பே தெரிவித்ததாகவும், அதனை தற்போது ரஜினிகாந்த் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் கமல் ஹாசன் கூறியிருப்பதற்கு, நிதியமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தான் நடத்தும் நிகழ்ச்சி பிரபலமடைய தமிழக அரசு மீது சேற்றை வாரி வீசுவதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் கமல் ஹாசன் கூறுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பு சட்டமே சரியில்லை என்று கமல் சொல்ல வருகிறாரா? எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
