பழைய விஷயங்களை பேசி என்ன புண்ணியம் இதனால் ரஜினிக்கு என்ன பிஎச்டி பட்டமா கொடுக்கப் போகிறார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  கடுமையாக சாடியுள்ளார் ,  பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் .  சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் ராமரையும் சீதையையும் இழிவுபடுத்தும் வகையில் சேலம் மாநாட்டில் பெரியார் நடந்து கொண்டார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் . அவரின் பேச்சு  திராவிடர் கழகம் மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி  ஏற்படுத்தியது . 

திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதை கடுமையாக கண்டித்ததுடன் ரஜினியை கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர் . தன் பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழகம்  வலியுறுத்தியது .  ஆனால் தான் பேசிய கருத்தில் எந்த தவறும் இல்லை அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி மறுத்துவிட்டார்.  இந்நிலையில் ரஜினிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்கள் ரஜினிக்கு எதிராக கருத்து கூறிவருகின்றனர்.   இதுபற்றி பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு எந்தக் கருத்தை கூறினாலும் ரஜினி யோசித்து கூறவேண்டும் ஒரே நேரத்தில்  இரண்டு கருத்துக்களை கூறக்கூடாது எனவும் அவர் கண்டித்துள்ளார்.

 

இந்நிலையில் பெரியார் குறித்த விமர்சனத்திற்கு ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ,  பெரியார் குறித்து பேசியது மறக்க வேண்டிய சம்பவம்  எனக் கூறிவிட்டு மீண்டும் ரஜினி அதை ஞாபகப்படுத்தி உள்ளார் .  பழைய விஷயங்களைப் பற்றிப் பேசுவதால் ரஜினிக்கு என்ன பிஎச்டி பட்டமாக கொடுக்கப் போகிறார்கள் ,  தேவையில்லாதவைகளை எல்லாம் அவர் ஆராய்ச்சி செய்ய கூடாது என அவர் கடுமையாக சாடியுள்ளார்.  அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்திற்குரியது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.