ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் என அ.தி.மு.கவில் இரண்டு பவர் சென்டர்கள் இருந்து வரும் நிலையில் ஜெயக்குமாரும் மற்றொரு பவர் சென்டராக உருவாகி வருகிறார். சசிகலா மற்றும் தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்குவது என்று முடிவெடுத்த பிறகு அந்த தகவலை ஊடகங்களிடம் யார் சொல்வது என்கிற ஒரு தயக்கம் அனைத்து அமைச்சர்கள் மத்தியிலும் இருந்தது. தினகரன், சசிகலாவை ஒதுக்கி வைக்கும் நிகழ்வை முன்னின்று நடத்திய எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணியே கூட செய்தியாளர்களை சந்தித்து பேச அப்போது தயங்கினர். 

ஆனால் சிறிதும் தயங்காமல் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக அமைச்சர்கள் புடை சூழ அறிவித்தார் ஜெயக்குமார். அப்போது முதலே டெல்லி ஜெயக்குமாரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தது. டி.டி.வி தினகரன் மட்டும் இன்றி, ஸ்டாலின், ரஜினி, கமல், ராமதாஸ், சீமான் என யாராக இருந்தாலும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயக்குமார் பதில் அளிக்கும் விதம் டெல்லியை மிகவும் கவர்ந்தது.

மேலும் ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்த ஜெயக்குமாரால் இந்தியையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இதனால் அ.தி.மு.க தொடர்பான சில முக்கிய நடவடிக்கைகளுக்கு டெல்லி ஜெயக்குமார் மூலமே எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வந்துள்ளது. இந்த நிலையில் தான் கடந்த திங்களன்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சரான ஜெயக்குமாரும் உடன் இருந்தார்.

 

அதுவும் ஜெயக்குமாரை வரச் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடியே கூறியதாக ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த அளவிற்கு டெல்லி வட்டாரத்தில் செல்வாக்குடன் இருப்பதற்கு துணிச்சலான பேட்டி மற்றும் செய்தியாளர்களை சமாளிக்கும் விதம் ஆகியவற்றையும் கடந்து யாருடனும் இணக்கமாக பழகுவது, ஒளிவு மறைவின்றி பேசுவது என்று ஜெயக்குமாரின் பிளஸ் பாய்ன்ட்டை பட்டியிலிடுகின்றனர். அ.தி.மு.கவை பொறுத்தவரை ஜெயலலிதாவிடம் செல்வாக்குடன் இருப்பவர்கள் சசிகலாவிடம் செல்வாக்காக இருக்க முடியாது.

 

இதே போல் சசிகலாவின் செல்லப்பிள்ளையாக இருப்பவர்களால் ஜெயலலிதாவிடம் செல்வாக்கு பெற முடியாது. இதனை உடைத்து ஜெயலலிதா – சசிகலா ஆகிய இரண்டு பேரிடமுமே சுமூக உறவை கொண்டிருந்தவர் ஜெயக்குமார் என்கின்றனர். அதனால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து இறக்கப்பட்டாலும் நாடாளுமன்ற தேர்தலில் மகனுக்கு சீட், சட்டப்பேரவை தேர்தலில் வென்றதும் அமைச்சர் பதவி என்று ஜெயக்குமாரால் மீண்டும் அதிகார வட்டத்தில் நுழைய முடிந்தது என்கிறார்கள். 

மேலும் தமிழக அரசின் முகமாக இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட ஜெயக்குமாரிடம் மிகுந்த மதிப்புடன் நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. கட்சி விவகாரமாக இருந்தாலும் சரி, ஆட்சி விவகாரமாக இருந்தாலும் சரி ஜெயக்குமாரின் சிபாரிசுக்கு தற்போது முதலமைச்சர் அலுவலகத்தில் தனி மரியாதை என்கிறார்கள். இதனை பயன்படுத்தி வட சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிர்வாகிகள் நியமனத்தில் ஜெயக்குமார் தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள். 

மேலும் அதிகாரிகள் நியமனம், அதிகாரிகள் பணியிடமாற்றம் என தனது துறைக்கும் அப்பாற்பட்டு மற்ற துறைகளிலும் ஜெயக்குமார் துள்ளி விளையாடுவிதாக பேசப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்சை முற்றிலுமாக ஒதுக்கி வைத்த நிலையில் கட்சி விவகாரம் குறித்து தங்கமணி, வேலுமணி தவிர ஜெயக்குமாரிடம் மட்டுமே பேசுவதாகவும் சொல்லப்படுகிறது.  இதனால் ஜெயக்கமார் வீட்டில் மட்டும் அல்லாமல் அவரது அலுவலகமும் கூட எப்போதும் திருவிழா கூட்டம் போல் காணப்படுகிறதாம்.