தமிழக அமைச்சர்கள் சென்னைக்கு செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையம் வந்து இருந்தனர். அவர்கள் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானமானது மதியம் 2 மணி அளவில் சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திடீரென மீண்டும் தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

இதனால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் 2 மணி நேரத்திற்குப் பிறகு மூன்று அமைச்சர்களும் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறினர். வெளியே வந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான் வெளியே வந்ததாகும் வேறு எதுவும் பிரச்சினை இல்லை என்றும் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். 

அந்த நேரத்திலும் அமைச்சர் கேகேஎஸ்ஆர் செய்தியாளர்களிடம் 'நல்லவேளை எங்கள கீழே இறக்கி விட்டாங்க' என்று நகைச்சுவை ததும்ப கூறிச் சென்றது செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று அமைச்சர்களும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது