திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்துவரப்படுகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் இறந்த தகவல் அறிந்து, நேரில் நலம் விசாரிக்க தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். காலை 10 மணியளவில் திண்டிவனம் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, உடனே விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அவசர சிகிச்சை அளித்தனர். அமைச்சர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால்  விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.