உள்ளாட்சி தேர்தல் மூன்று ஆண்டுகள் நடக்காமல் இருக்க ஸ்டாலின் தான் காரணம். நடைபெற இருக்கும் இந்த தேர்தலை நிறுத்துவதற்கு ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவேண்டாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் விநியோகம் செய்யபட்டது. அதிமுக சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி வேட்பாளராக முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து விருப்பமனுவினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கினார், 

அவருடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடன் இருந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக ஆட்சி எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்புறமாக ஸ்டாலின் பேசிக்கொண்டே இருப்பார். ஸ்டாலினை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் ஏற்கனவே இந்த தேர்தல் மூன்று ஆண்டுகள் நடக்காமல் இருக்க ஸ்டாலின் தான் காரணம். நடைபெற இருக்கும் இந்த தேர்தலை நிறுத்துவதற்கு ஸ்டாலின் எந்த வேலையும் செய்யவேண்டாம் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் முழுமையான வெற்றி பெறும். மக்களின் எழுச்சி சிறப்பாக இருக்கிறது. திமுகவிற்கு வீழ்ச்சி உண்டாகி இருக்கிறது. IAS, IFS , IPS இவர்கள் யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றலாம். நிர்வாகம் சரியாக இருப்பதற்கு மாற்றப்பட்டிருக்கிறது.நடிகர்கள் வெற்றிடம் என்று கூறுவது எம்ஜிஆர், சிவாஜி இல்லாததுதான் வெற்றிடம். எதிலும் வெற்றிடம் கிடையாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பின்பு மூன்றாண்டுகள் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

எங்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்அமைச்சர், துணை முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். ஒரு நடிகரை போல் இன்னொரு நடிகர் வரத்தான் செய்வார்கள். வெற்றிடம் என்பது கிடையாது என தெரிவித்தார்.