தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், கனிமவளத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும்  சி.வி.சண்முகம் உள்ளார். கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அவர், தீவிர பிரசாரம் செய்தார். இதனிடையே அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி, கொரோனா தொற்று காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.