சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற அதிமுக அரசின் விளக்க சைக்கிள் பேரணியில் அமைச்சர்கள், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை போற்றும், வணங்கும் தலைமை அ.தி.மு.க.வின் உடையது. அந்த தலைமையை அம்மா வளர்த்தெடுத்தார். தற்போது அதை மருது சகோதரர்களான ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் கட்டி காத்து வருகின்றனர் என்றார். 

மேலும் ரஜினி உள்ளிட்ட நடிகர் மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அரசியலுக்கு வரவேண்டும். நாடி ஜோசியத்தை பார்த்து வரக்கூடாது என்றார். அதிமுகவுக்கு எதிரி திமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும்தான் என ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என திமுக கூறுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர்களுக்கு தலைவலி வந்தால் எப்படி மருத்து எடுத்து கொள்வார்களோ, அதேபோல் தான் மற்றவர்களுக்கு எப்போது தலைவலி வருகிறதோ அப்போது தான் மருந்து எடுத்து கொள்வார்கள் என்றார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அரசியல் நோக்கத்திற்காகவே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.