தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா சற்று குறைய தொடங்கியதை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. சிறிது நாட்களிலேயே மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டன.

கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிது நாட்களிலேயே கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 9,10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைத் தொடர்ந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண்களை நிர்ணயிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. எனவே பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிகட்டியூர் அரசு தொடக்கப்பள்ளி, க.பரமத்தி ஆரம்ப பள்ளிகளில் அமைச்சர் ஆய்வு நடத்தினார். 


அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனா பெருந்தோற்றை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் 75 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.