தேர் விபத்தில் உயிரிழந்த  மாணவனின் சடலத்திற்கு என் கையால் மாலை அணிவித்தேன் என கூறியபோது அமைச்சர் அன்பில் மகேஷ் கண்கலங்கினார்.  சட்டப்பேரவையில் அது உருக்கத்தை ஏற்படுத்தியது. 

தேர் விபத்தில் உயிரிழந்த மாணவனின் சடலத்திற்கு என் கையால் மாலை அணிவித்தேன் என கூறியபோது அமைச்சர் அன்பில் மகேஷ் கண்கலங்கினார். சட்டப்பேரவையில் அது உருக்கத்தை ஏற்படுத்தியது. அன்று தன்னைவிட அதிக துயரத்தில் இருந்த முதல்வர் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினால் தான் தன்னைத் தானே தான் தேற்றிக் கொள்ள முடியும் என தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறியதாகவும் மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திரத்தன்று சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட10 அடி உயரம் கொண்ட பல்லக்கு தேர் திருவிழாவில் கலந்து கொண்ட சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதிகாலை 3:30 மணியளவில் தேரின் ராட்சத சக்கரம் பள்ளத்தில் இறங்கியது.

அதே நேரத்தில் அந்த இடத்திற்கு மேல் சென்றார் உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது தேரை பிடித்திருந்த பக்தர்களை மின்சாரம் தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது, இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாலையிலேயே இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினர்க்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். இந்நிலையில் அந்த சோக நிகழ்வு குறித்து இன்று சட்டமன்றத்தில் கருத்து பகிர்ந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கண் கலங்கியபடி உருக்கமாகப் பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:- 

தேர் விபத்து அதிகாலை 3 மணிக்கு நடந்திருந்தாலும், அன்று காலை 5 மணிக்கே முதலமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்தார். அதிகாலையில் தன்னை தொடர்புகொள்ளும் வகையில் அதிகாரிகளுக்கு எத்தகைய சுதந்திரத்தை முதல் அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது இதன் மூலம் உணர முடிகிறது என்றார். கடந்த 11 மாதங்களாக மாணவ மாணவிகளுக்கு மாலை சூட்டி வந்த நான், அன்று தேர் விபத்தில் உயிரிழந்த எட்டாம் வகுப்பு மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்தேன். எனக் கூறியபோது கண்கள் கலங்கினார். ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று ஆறுதல் கூறினால் மட்டுமே தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முடியும் என முதல்வர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மாணவனின் சடலத்துக்கு மாலை அணிவித்த செய்தியை கூறியபோது அமைச்சர் அன்பில் மகேஷ் கண்கலங்கியது அவையில் உருக்கத்தை ஏற்படுத்தியது.