தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த நிலையில் அவசர அவசரமாக ஓ.ராஜா பதவியேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரர் ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு அதோடு 17 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்களையில் தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.ராஜா நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். 


இதையும் படிங்க;-   ஓபிஎஸ் தம்பியின் நியமனம் செல்லாது... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதோடு கடந்த 23-ம் தேதி ஓ.ராஜா மற்றும் இயக்குனர்களின் நியமனத்தை  திடீரென ரத்து செய்தும் உத்தரவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் படுஜோராக தேனி என்.ஆர்.டி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின. 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அவசர அவசரமாக தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பதவியேற்றுள்ளார். இவருக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் ஓ.ராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி ஆவின்  தலைவராக பதவி ஏற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.