மத நல்லிக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் மக்கள் புறந்தள்ள வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டமாக கூறியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றினர். இதேபோல் ஈரோட்டிலும் பெரியார் சிலையை சேதப்படுத்த முயன்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இதுபோன்று தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. 

அதனைத்தொடர்ந்து நேற்று புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையில் மர்மநபர்கள் காவித்துணியை போர்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்  கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், எம்ஜிஆர் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல். கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் அத்தனை பேரையும் மக்கள் அடையாளம் காண வேண்டும். அவர்கள் புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவரை நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.