தமிழக அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் வெல்ல முடியாத மனிதராக வலம் வந்தவர் எம்ஜிஆர். அதிகாரம் , புகழ் மட்டுமல்ல தனது மனிதாபிமானத்தால், வள்ளல் தன்மையால் ஏழை மக்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்கிறார்.

அவரது சமகாலத்தவர் ஒவ்வொருவருக்கும் எம்ஜிஆர் பற்றிய சுகமான , பிரமிப்பான , நெகிழ்ச்சியான அனுபவங்கள் இருந்தது. அவரை அறிந்தவர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் தனது உதவி செய்யும் மனப்பாங்கினால் எம்ஜிஆர் உயர்ந்து நின்றார்.

1940 களில் திரைத்துறையில் கால்பதிக்க போராடி கொண்டிருந்த எம்.ஜி.ராம்சந்தர் என்ற அந்த இளைஞனுக்கு தனது 19 வது வயதில் சிறு போலீஸ் அதிகாரி வேடம் கிடைக்க சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதன் பின்னர் மன்னருக்கு பின்னால் சாமரம் வீசும் வேடம் , தளபதி வேடம் என சிறு சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின்னர் 50 களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் தாய் மகளுக்கு கட்டிய தாலியில் சமூக படத்தில் தலை காட்டினார். 

அதன் பின்னர் ஏறுமுகத்தில் சென்ற எம்ஜிஆரின் வெற்றி பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை, மரணத்தை தவிர. காங்கிரஸ்காரராக வாழ்க்கையை துவக்கிய காந்திய பக்தரான எம்ஜிஆர் கருணாநிதியுடன் கிடைத்த நட்பு காரணமாக திமுகவில் இணைந்தார். 

அதன் பின்னர் எம்ஜிஆரும் வளர்ந்தால் எம்ஜிஆரால் திமுகவும் வளர்ந்தது. 1962 ல் தஞ்சை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கருணாநிதி காங்கிரஸ் கோட்டையும் அதன் செல்வாக்குமிக்க வேட்பாளரையும் வெல்ல முடியாத சூழ்நிலையில் எம்ஜிஆர் 40க்கும் மேற்பட்ட கூட்டங்களில் விடாது செய்த பிரச்சாரம் கருணாநிதி வெல்ல காரணமாக அமைந்தது. 

அதன் பின்னர் 1969 ல் கருணாநிதி முதல்வர் ஆவதற்கும், 1971 ல் திமுக இமாலய வெற்றி பெறுவதற்கும் எம்ஜிஆர் காரணமாக இருந்தார். 1967 திமுக வெற்றிக்கு எம்ஜிஆர் சுடப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. இப்படி திமுகவின் அதன் தலைவர் கருணாநிதியின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த எம்ஜிஆர் தான் கலைத்துறையில் மட்டுமே இருக்க நினைத்தார். 

ஆனால் மு.க.முத்து மூலம் நடந்த சீண்டல்கள் , சிலரின் துர்போதனை காரணமாக எம்ஜிஆர் திமுகவிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். 1972 ல் அதிமுக எனும் தனி இயக்கம் கண்டார். அதன் வளர்ச்சி 2016 வரை திமுகவுக்கு எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகளை கடந்த பின்னரும் தடையாக இருப்பதை நினைத்து திமுக தலைவர் நிச்சயம் வருத்தப்படத்தான் செய்வார். 

நடிகராக இருந்து தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஏழைமக்களுக்கு உதவியவர். தனது மரணத்திற்கு பின்னரும் தனது சொத்துக்களை காது கேளாதோர் பள்ளிக்கும் , சத்யா ஸ்டுடியோவை கல்விக்கூடமாகவும் ஆக்கியவர் எம்ஜிஆர். 

1977 ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் தனது மறைவு வரை தோல்வியடையாத முதல்வராக இருந்தார். தனது ஆட்சியில் பெரும்பாலும் சாதாரண ஏழைமக்கள் நலனுக்காக எம்ஜிஆர் பாடுபட்டார் என்பதை எதிர்கட்சியினர் கூட மறுக்கமாட்டார்கள். அதற்கு உதாரணம் சத்துணவு திட்டம் , இலவச திட்டங்கள் பலவற்றை கூறலாம். 

எதிர்கட்சியினரால் கடைசிவரை வெல்ல முடியாதவராக இருந்த எம்ஜிஆரை இயற்கை மரணம் மூலம் வென்றது. மறைந்த முதல்வராகவே எம்ஜிஆர் இன்றும் அண்ணா சமாதிக்கருகில் உறங்குகிறார். 1987 ஆம் ஆண்டு அதிகாலையில் உறக்கத்தில் மாரடைப்பு காரணமாக எம்ஜிஆர் அனைவரையும் மீளாத்துயரில் ஆற்றிவிட்டு மறைந்த நாள் இன்று. அவருக்கு newsfast.in அஞ்சலி செலுத்துகிறது.