எடப்பாடியாரை சித்தப்பா என சொல்லும் அதே நேரத்தில்தான் திமுகவினரையும் பங்காளிகள் என நாங்கள் கூறி வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமியை சித்தப்பா என கூறிய இதே நேரத்தில்தான் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசாவை அண்ணன் என்றும், உதயநிதி என் தம்பி என்றும் சீமான் கூறி வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களையும் அண்ணி என்றுதான் சீமான் அழைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெரியப்பா என கூறலாம், ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை சீமான் சித்தப்பா என கூறக் கூடாதா என நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் எடப்பாடி பழனிச்சாமியை சித்தப்பா என குறிப்பிட்டு பேசியதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், இடும்பாவனம் கார்த்தி இவ்வாறு விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சி மீதும் மக்களுக்கு ஒவ்வொரு புரிதல் உண்டு, நாம் தமிழர் கட்சி என்றால் அது திமுகவை கடுமையாக விமர்சிக்கும், பாஜக, அதிமுக என்று வரும்போது இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கி விடும் என்பதுதான் அக்கட்சியின் மீது உள்ள பொதுவான விமர்சனம். கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே திமுகவை விமர்சிப்பதில்லை அக்கட்சி குறியாக இருந்து வருகிறது. தமிழீழம் எங்கள் தாகம் என்ற முழக்கத்தை முன்வைத்து அக்காட்சியை சீமான் கட்டமைத்தது முதல் அதன் அரசியல் திமுகவை முன்னிறுத்தியே உள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என பேசிவரும் சீமான், அதில் அதிமுக என்ற திராவிடத்தை தவிர்த்து திமுக என்ற திராவிடத்தை குறிவைத்து தாக்கி வருகிறார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக திமுக-நாதக இடையேயான மோதல் வலுத்து வருகிறது. தற்போது திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் அந்த மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் முதல்வரையும் அவரின் குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினையும் அவதூர பேசுவதில் சீமான் தம்பிகள் முன்னணியில் உள்ளனர் என்றே சொல்லலாம் அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். இதேபோல திமுக அரசை அவதூறு பேசி சிறை சென்ற யூடியூப்பர் மாரிதாஸ் ஒரு சில தினங்களில் விடுதலையானார். அதனை மேற்கோள்காட்டி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாரி தாஸ் என்பவரை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர், ஆனால் நீதிமன்றம் மாரிதாசிக்கு பிணை வழங்கியுள்ளது. மாரிதாஸ்க்கு எதிரான வழக்கை திமுக அரசு வழக்கறிஞர்கள் சரியாக நடத்தவில்லை, ஆனால் நாம் தமிழர் கட்சி துரைமுருகனை திமுக அரசு குறிவைத்து பழிவாங்கி வருகிறது என விமர்சித்து வருகிறார்.
அதேபோல் கேடி ராகவன் விவகாரத்தில் சீமான் தெரிவித்த கருத்தால், பாஜகவின் பி டீம் நாதக என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விமர்சித்து வருகின்றன. இதனால் தன்னை பாஜகவுடன் தொடர்பு படுத்தி விமர்சிப்பவர்களை எச்சரிக்கும் வகையில் பொதுக்கூட்ட மேடையிலேயே தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காட்டினார் சீமான். அவரின் இந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவருக்குரிய எந்த நாகரீகமும் இல்லாதவர்தான் சீமான் என விமர்சித்து வருகின்றனர். இதேபோல் தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசையும் முதல்வரையும் இழிவாகப் பேசிய நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் மேடை ஏறி தாக்கினர், இது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. மொத்தத்தில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் எதிர்க்கட்சி என்பதையும் தாண்டி எதிரி கட்சியாகவே மாறியுள்ளன.

இதே நேரத்தில் அதிமுகவை பொருத்தமட்டில் சீமானின் நடவடிக்கைகள் மென்மையாகவும், அனுசரனையாகவுமே இருந்து வருகிறது. செய்தியாளர்கள் அதிமுக மீது விமர்சனங்களைமுன்வைத்து கேள்வி எழுப்பினாலும், இதற்கெல்லாம் வழிகாட்டியது திமுகதான் என திமுகவை குறை சொல்லும் வகையிலேயே அவரின் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. மேலும் சீமான் அதிமுகவினரை உறவுமுறை சொல்லி அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அவர்களை சித்தப்பா என சீமான் அழைத்து வருகிறார். அதிமுகவின் மீது சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் உள்ள மென்மையான போக்குதான் காரணம் என விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதே போல் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி மேடையில் பேசிய ஒருவர் எங்கள் அத்தை ஜெயலலிதா இருந்திருந்தால் இப்போதும் திமுக எதிர்கட்சியாகத்தான் இருந்திருக்கும் என பேசியுள்ளார். தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி பேட்டிகொத்துள்ளார். அதில் அதிமுகவினரை உறவு முறை சொல்லி பாராட்டுவதற்கான காரணம் குறித்தும் அவர் விலக்கமளித்துள்ளார் அதன் விவரம்பின்வருமாறு:-
எடப்பாடியாரை சித்தப்பா என சொல்லும் அதே நேரத்தில்தான் திமுகவினரையும் பங்காளிகள் என நாங்கள் கூறி வருகிறோம். எடப்பாடி பழனிச்சாமியை சித்தப்பா என கூறிய இதே நேரத்தில்தான் திமுகவைச் சேர்ந்த எம்.பி ஆ.ராசாவை அண்ணன் என்றும், உதயநிதி என் தம்பி என்றும் சீமான் கூறி வருகிறார். தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களையும் அண்ணி என்றுதான் சீமான் அழைக்கிறார். காங்கிரஸில் இருக்கிற திருநாவுக்கரசு, திருச்சி வேலுச்சாமி, பாஜகவில் இருக்கிற பொன். ராதாகிருஷ்ணன் என எல்லோரையுமே உறவுமுறை சொல்லித்தான் சீமான் அழைக்கிறார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொன்னார் என சொல்லுகிறார்களே தவிர நாங்கள் உறவுமுறையை சொல்லி அழைத்தால் தவறு என்று கூறுகிறார்கள். எடப்பாடியாரை சித்தப்பா என சொல்லியதற்கு நாம் தமிழர் கட்சியின் மீது இவ்வளவு பெரிய விமர்சனம் வருகிறது. ஏன் அவரை சீமான் சித்தப்பா என சொன்னார் என்றால், ரஜினிகாந்த் நாட்டை ஆள்வதை விட என் சித்தப்பா எடப்பாடி பழனிச்சாமி ஆண்டுவிட்டுப் போகட்டும் என்ற அர்த்தத்தில்தான் சீமான் கூறினார்.

ரஜினிகாந்த் ஆட்சிக்கு வரக்கூடாது, ஒருவேளை என் சித்தப்பாவின் ஆட்சி சரியில்லை என்றால் அவரின் பிள்ளைகளாகிய நாங்கள் ஆண்டு விட்டுப் போகிறோம் என்பதற்காகத்தான் அவர் எடப்பாடியாரை சித்தப்பா என கூறினார். எடப்பாடியை சித்தப்பா என சீமான் கூறிவிட்டார் என அதைவிவாதப் பொருளாக்குகிறீர்கள். எம்ஜிஆரை ஸ்டாலின் பெரியப்பா என்று சொல்கிறாரே, எம்ஜிஆர் ஆட்சி நல்லாட்சியா? எம்ஜிஆரின் ஆட்சி கொடுமையான கொடுங்கோலாட்சி, எம்ஜிஆர் ஆட்சியில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது, அங்கும் மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கிறது, மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது, அப்படிப்பட்ட எம்ஜிஆரை பெரியப்பா என்று ஸ்டாலின் எப்படி சொல்லலாம்? அப்படி என்றால் எம்ஜிஆரை ஸ்டாலின் பெரியப்பா என்று சொல்லலாம், எடப்பாடியாரை சீமான் சித்தப்பா என்று சொல்லக்கூடாதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
