- Home
- Tamil Nadu News
- வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் இந்து அமைப்புகள், தமிழக அரசு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? ....... அரசியலா? என முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பரபரக்கும் திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். ஆனால் அசாதாரண சூழல் காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மலையில் தீபம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டது.
மீண்டும் உத்தரவிட்ட நீதிபதி
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் தொடர்ச்சியாக தாம் வழங்கிய தீர்ப்பை இன்றைய தினமே (வியாழன் கிழமை) செய்து முடிக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
இதனை சற்றும் பொருட்படுத்தாத தமிழக அரசு வழக்கை உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தது. அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி இரண்டாவது முறையும் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
வளர்ச்சி அரசியலா..? ......... அரசியலா..?
இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள். மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்! இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!” என குறிப்பிட்டுள்ளார்.
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 5, 2025

